தலைவர்கள் பட்டியலில் காமராஜரை சேர்க்க கோரிக்கை

தலைவர்கள் பட்டியலில் காமராஜரை சேர்க்க கோரிக்கை

காமராஜர் 

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில், தலைவர்கள் பட்டியலில் காமராஜரை சேர்க்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஜனதாதள மாநில துணைத் தலைவர் வக்கீல் எம்.சொக்கலிங்கம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் "தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்பில் "நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றீதழ்கள் வழங்கப்பட வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது

. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ள தலைவர்கள் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் சேர்க்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்று, சுமார் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக சுமார் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்லூரிகள் என தமிழ்நாடு முழுவதும் அமைத்து, 10வது வகுப்பு வரை இலவசக கல்வி வழங்கி, சீருடை மற்றும் தேவையான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார்.

அவரது பிறந்த நாளான ஜீலை 15-ல், கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்ததோடு அன்றைய தினம் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மாணவர்களிடையே பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்த வேண்டுமென தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவரது ஆட்சி காலத்தில் அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வந்ததை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் தனது ஆட்சி காலத்தில் அறிவித்த மேற்படி செயல்கள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக கல்வி சாலைகளின் பின்பற்றப்படாதது மட்டுமின்றி, சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் காமராஜர் பெயர் சேர்க்கப்படாதது ஏற்புடையதல்ல. ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் பேச்சு போட்டிகளின் தலைவர்களின் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜரின் பெயரையும் சேர்த்து அரசு அறிவிப்பாக வெளியிட ஆவண செய்யுமாறு கேட்டுக கொள்கிறேன்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story