ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரிக்கை

ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரிக்கை
ஊராட்சி செயலாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் ஆர்.ஜான்போஸ்கோ பிரகாஷ்.
கிராம ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற ஊராட்சி சங்க செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: கிராம ஊராட்சிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிப்புரிந்து வரும் செயலர்களுக்கு நிரந்தர வைப்பு நிதியை கணக்கில் சேர்த்து, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வழங்கிட வேண்டும். கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முன்னர் வழங்கப்பட்ட ரூ.1000}யை உயர்த்தி ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சியில், பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதிய வழங்கிட வேண்டும். பணியில் இருந்து உயிரிழந்த ஊராட்சி செயலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலர்களின் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ஜான்போஸ்கோ பிரகாஷ், மாநில பொருளாளர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், மீண்டும் மாவட்டத் தலைவராக எம்.என்.செந்தில்குமார், மாவட்டச் செயலாளராக ஜி.சரவணன், பொருளாளராக த.முத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர்களாக டி.செல்வமணி, சிதம்பரம், தலைமை நிலையச் செயலாளராக அமிர்தலிங்கம், மகளிர்ச் செயலாளராக பி.ராஜேஸ்வரி, துணைத் தலைவராக க.திருநாவுக்கரசு, துணைச் செயலாளராக ஆர்.சசிகுமார், இணைச் செயலாளர்களாக அ.ரமேஷ் , ரவி, மாநில செயற்குழு உறுப்பினராக எஸ்.திருமாறன், மாநில பொதுக் குழு உறுப்பினராக மு.ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags

Next Story