குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
தேவகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் கிடப்பதால், குடிநீர் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாண்டிற்கு திருச்சி - ராமேஸ்வரம், மதுரை - ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 300 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்குகின்றன. இவற்றின் மூலம் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தேவகோட்டைக்கு வந்து செல்கின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப குடிநீர் வசதியின்றி கிடந்தது. தற்போது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு நல்ல நிலையில் இருந்தும், குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதால், பயணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு மின் வசதி செய்து கொடுப்பதில் பிரச்னை நீடிப்பதாக தெரிவிக்கின்றனர்.
பஸ்ஸ்டாண்டிற்குள் வரும் பஸ்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம், அந்த நிதி மூலம் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வளாகம், இருக்கை வசதிகளை போதிய அளவில் செய்துதர வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ரோட்டரி சங்க நிர்வாகம் பங்களிப்பில் இங்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தியும், அதை நகராட்சி முறையாக பராமரிக்காமல் விட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக, பயணிகள் தெரிவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிக்கு கிடைப்பதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.