பொன்னமராவதியில் கோரைபுற்களை அகற்ற கோரிக்கை
கோரை புற்கள்
பொன்னமராவதியில் இருந்து கொப்பனாபட்டி செல்லும் சாலையில் காட்டுப்பட்டி ஊராட்சியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே பழனியப்பன் ஏந்தல் கண்மாய் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த கம்மாயில் கோரைப்புற்கள் மண்டி உள்ளன.
மேலும் கண்மாய் கரையில் குப்பைகளும் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் கண்மாயில் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.
புகை பிடிப்பவர்கள் நெருப்பை அணைக்காமல் வீசி செல்வதால் குப்பை மற்றும் கோரை புற்கள் அவ்வப்போது தீப்பற்றி எரிந்து வருகின்றன. கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏற்பட்ட நிலையில் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தினர் போராடி தீயை அணைத்தனர்.
இதன் அருகில் மின்மாற்றிகள் இருந்ததால் சுமார் 3 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. கண்மாயில் மண்டி உள்ள கோரை புற்களையும், குப்பைகளையும் அகற்றி கண்மாய் தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.