நடை பயிற்சிக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற கோரிக்கை
திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா விளையாட்டரங்கத்தை சுற்றி மார்க்கெட் நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதா. அதை யார் எடுத்து உள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றி நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி தளத்தை இந்த வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர்
. நடைப்பயிற்சி செல்வோர் இது குறித்து தொலைபேசி மூலம் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளது. இங்கு மாணவ மாணவிகள் அதிக அளவில் செல்கிறார்கள். கடந்த ஓராண்டுக்கு முன்பு மாநகராட்சி அலுவலர்கள் இந்த கடைகளை எடுக்க முயற்சித்தனர். ஆனால் சிலர் இதை தடுத்து விட்டதாக தெரிகிறது. ஆகையால் இந்த கடைகளை அகற்றி நடைபயிற்சி செல்வோருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு மேயர் அன்பழகன் பதில் கூறுகையில், கொரோனா காலத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டை பிரித்து பல இடங்களில் சிறிய அளவில் மார்க்கெட் அமைக்கப்பட்டது. அந்த வகையில் அண்ணா விளையாட்டரங்கம் சாலையிலும் மார்க்கெட் அமைக்கப்பட்டது. அங்கு யாருக்கும் ஏலம் விடவில்லை. வியாபாரிகள் வியாபாரம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.அதன் அடிப்படையிலேயே அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சிக்கு இடையூறாக இருக்கும் சமயத்தில் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், திருச்சி குட்ஷெட் மேம்பாலத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வரையிலான சாலையில் சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்தில் முடுக்கு பட்டியை சேர்ந்த ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகையால் சாலையோரம் உள்ள இந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு மேயர் அன்பழகன் பதில் கூறுகையில், சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர்.மாநகராட்சி ஆணையர் மூலம் இதற்கு நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அகற்றப்படும். அதேபோல் திருச்சி ஜங்ஷன் ஸ்டேட் பேங்க் சாலை பகுதியில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், திருச்சி மாநகரில் தூய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மாற்று பணிக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் இதர பணிகளுக்காக அழைக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.