தரமற்ற சிமெண்ட் கம்பத்தை அகற்ற கோரிக்கை
தரமற்ற மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
உலகமே இன்று உள்ளங்கையில் அடங்கி விட்டது. அதற்குக் காரணம் மின்னணு பொருட்களின் அசுர வளர்ச்சி தான். இதில் முக்கியமானது கணினி மற்றும் அதனுடைய செயல்பாடுகளை துரிதப்படுத்தும் இணையதள இணைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களும் இணையதள வசதியை பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பாரத் நெட் என்ற நிறுவனம் கிராம பகுதிகளில் இணையதள இணைப்புகளை வழங்கி வருகிறது. இதற்காக ஆங்காங்கே சிமெண்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக கேபிள்கள் பிணைக்கப்பட்டு, இணையதள வசதி வழங்கப்படுகிறது.
இதற்காக அமைக்கப்படும் சிமெண்ட் கம்பங்கள் தரமற்ற கம்பிகளால் செய்யப்பட்டு கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளி ஊராட்சியில் உள்ள வெங்கடாபுரம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் கம்பம் நேற்று இரவு அடித்த சிறிய அளவிலான காற்றுக்கே தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து கீழே விழுந்து விட்டது. இதே போல பல்வேறு சிமெண்ட் கம்பங்களும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் நடமாட்டம் இருக்கும் போது இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உயிர் சேதம் தவிர்க்க முடியாது. எனவே தரமான சிமெண்ட் கம்பங்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.