பழைய கரியப்பட்டி சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரிக்கை

பழைய கரியப்பட்டி சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரிக்கை

மனு அளிக்க வந்தவர்கள் 

விபத்துகளை தடுக்கும் வகையில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பழைய கரியப்பட்டி சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பூதலூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆ.கரிகாலன், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, பழைய கரியப்பட்டி கிராமத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். ஆண்கள், பெண்கள் தினசரி வேலைக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்கவும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய கரியப்பட்டி சர்வீஸ் சாலையை முழுமைப்படுத்தாமல் உள்ளனர். இதனால் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை உள்ளது. நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் சர்வீஸ் சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே குறுக்கிடும் பாலத்தை சரி செய்து தார்ச்சாலை அமைத்து, சர்வீஸ் சாலையை முறைப்படுத்தி தரவேண்டும்.விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது திமுக கிளைச் செயலாளர் டி.மனோகரன், திமுக பிரதிநிதி கார்த்திகேயன், அமமுக ஊராட்சி செயலாளர் கே.விக்னேஷ், தஞ்சாவூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக்கழக துணைச் செயலாளர் ஏ.ராஜூ, மற்றும் பாக்யராஜ், எம்.தினேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story