ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பேட்டரி கார் இயக்க கோரிக்கை
பேட்டரி கார்
புதுக்கோட்டை ஆட்சித் தலைவர் அலுவலகம் நுழைவாயில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகள்,முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் மனு அளிக்க வருவார்கள், அவர்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல முடியாது என்ற காரணத்தினால் கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உமா மகேஸ்வரி ஆகியோரின் முயற்சியால் பேட்டரி கார் ஒன்று தனியார் வங்கி பங்களிப்புடன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த பேட்டரி காரால் மிகுந்த பயன் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் கார் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 70 வயது மாற்றுத்திறனாளி கோவிந்தராஜ் தெரிவிக்கையில், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற காழ்ப்புணர்ச்சியால் தற்பொழுது அந்த பேட்டரி கார் ஒரு மூலையிலேயே முடக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வரும்பொழுது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே உடனடியாக அந்த பேட்டரி காரை முன்பு போல இயக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.