சின்னதாராபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
சின்ன தாராபுரம்
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள சின்னதாராபுரம் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 2- அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மின்வாரிய உதவி இயக்குனர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், காவல் நிலையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் சாலை ஓரம் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கரூர் - தாராபுரம் சாலை என்பதால், அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கிறது. குறிப்பாக காலை 7:00 மணி முதல் 9 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
மேலும், இப்பகுதியல் கல்குவாரிகள் இருப்பதால் கனரக வாகனங்கள் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நிற்கும் பயணிகள் மீது, அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் இப்பகுதியல் அடிப்படை வசதிகளான கழிவு நீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் கழிவு நீர் வழிந்து சாலைகளில் குளம்போல் நிற்கிறது.மேலும் கழிப்பறை வசதியும் இல்லாததால், இப்பகுதி பொதுமக்கள் திறந்தவெளிகளை கழிப்பறையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இப்பகுதிக்கு தேவையான புதிய பேருந்து நிலையம் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விழித்துள்ளனர்.