வீராணம் அருகே மயானத்தில் சுகாதார வளாகம் - மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை
மயானத்தில் சுகாதார வளாகம்
வீராணம் அருகே மயானத்தில் சுகாதார வளாகம் உள்ளதால் மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன், மாணிக்கம், சத்தியமூர்த்தி, சின்னசாமி, ரத்தினம், புகழேந்தி ஆகிய 6 பேர் அடங்கிய சமூக ஆர்வலர்கள் குழு மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட 132 ஊராட்சிகளில் உள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர்கள் வசிக்கும் சிற்றூர்களில் பார்வையிட்டனர். அந்த ஊர்களில் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் வசதி, குடிநீர், மருத்துவ வசதி, பள்ளிக்கூட வசதி உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டதுடன், அங்குள்ள மக்களிடம் கருத்துக்கள் கேட்டு அறிக்கை தயார் செய்தனர். அந்த அறிக்கையை புத்தகமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கொடுத்துள்ளனர். மேலும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வீராணம் அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அதாவது சுகாதார வளாகம் சமாதிகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளதால் அங்கு செல்ல மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அந்த ஊரில் பொது சுகாதார வளாகத்தை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story