மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி தடுப்புகள் அமைக்க, கோரிக்கை
மாமல்லபுரம் கடற்கரை
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். இங்குள்ள கடற்கரையிலும் உலவுகின்றனர். சுற்றுலா கடற்கரை பகுதியாக இருந்தும், இப்பகுதியை வியாபாரிகளே முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளனர்.
அதனால், பயணியர் நடக்கவோ, உலவி இளைப்பாறவோ இடமில்லை. கடற்கரை பகுதி முழுதும் குப்பை குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நகரிலிருந்து 2 கி.மீ., வெளியே உள்ள கடற்கரையில், பயணியர் அதிக அளவில் திரள்வது வாடிக்கையாக உள்ளது.
இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பெரும்பரப்பு திறந்தவெளி இடம், அதையொட்டி கடற்கரை உள்ளது. மணற்பரப்பில் வாகனங்களை ஓட்டிச்செல்ல இயலாத சூழல் இருந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் வரை, இக்கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணியர் செல்ல விரும்பியதில்லை.
கடந்த 2022-ல், சர்வதேச காற்றாடி விழா நடத்தியபோது, வாகன பாதை மற்றும் நிறுத்துமிட அவசியத்திற்காக, கிராவல் மண் நிரப்பி பாதை சமன் செய்யப்பட்டது. சாலையிலிருந்து குறுகிய தொலைவிலேயே கடற்கரை உள்ளதால், கார், இருசக்கர வாகன பயணியர் எளிதாக கடற்கரைக்கு செல்வது தற்போது தொடர்கிறது.
வார இறுதி நாட்களில் குவியும் பயணியர், துாய்மையான, சுகாதாரமான கடற்கரையை விரும்பி, இப்பகுதியில் முகாமிடுகின்றனர். இப்பகுதி விடுதிகளில் நடக்கின்ற நிகழ்ச்சிக்கு வருவோரின் வாகனங்கள், இங்கு அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
இப்பகுதியில் பாதுகாப்போ, போலீஸ் கண்காணிப்போ முற்றிலும் இல்லை. பயணியர் அதிகரித்து வரும் நிலையில், சமூகவிரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அதனால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பயணியர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத இக்கடற்கரை பகுதிக்கு செல்வதை தடுக்க, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி தடுப்புகள் அமைக்க, சுற்றுலா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.