தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க கோரிக்கை
திருச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க கோரிக்கை
திருச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தலைவர் இ.வீ.காந்தி அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் காவிரி ஆற்றின் கடைமடை பகுதிகளாக இருப்பதால் போதிய தண்ணீர் கிடைக்காததால், நெல் விவசாயத்தில் இருந்து பெரும்பாலானோர் தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்டனர்.
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் 60 விழுக்காடு தென்னை மரங்கள் அழிந்தன. சமீபத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஒரு குழுவாக சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வேளாண்மை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம்.
இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி டெல்லியில் இருந்து ஒரு நிபுணர் குழுவை பொள்ளாச்சிக்கு அனுப்பி வைத்து, அங்கு உள்ள தென்னை விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, குறைகளை தீர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் தஞ்சாவூர் மாவட் டம் தென்னை விவசாயிகளின் குறைகள் இதுவரை களையப்படவில்லை. மத்திய அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஆதாரவிலை தென்னை விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்க செய்ய வேண்டும்.
மத்திய அரசு விதிகளின்படி தேங்காயின் மொத்த உற்பத்தியில் 25 விழுக்காடு மட்டுமே கொப்பரையாக கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் விலை வீழ்ச்சி காரணமாக மீதி உள்ள 75 விழுக்காடு தேங்காய் கொப்பரை சந்தை விலையான ரூ.80க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதால், தென்னை விவசாயிகள் நட்டம் அடைந்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு ஒரு உடனடி தீர்வு காண வேண்டும்.
பேராவூரணி அருகில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்றுமதி சார்ந்த தொழில் மையம் தொடங்க முன்வர வேண்டும். தென்னை விவசாயிகளின் நலன்காக்க ஏற்படுத்தப்பட்ட தென்னை வளர்ச்சி வாரியம் கேரளாவில் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் அதன் மண்டல அலுவலகம் தென்னைக்கு எந்த தொடர்பும் இல்லாத சென்னையில் இயங்குகிறது.
தற்போது தமிழ்நாட்டின் மைய நகரமான திருச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். மேலும் மத்திய அரசு சார்பில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட ஒரு விவசாய நிபுணர் குழுவை அமைத்து பேராவூரணி பகுதிகளில் ஆய்வு செய்து தென்னை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்" இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.