வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை

வடலூரில் தமிழக அரசு அமைக்கும் வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, வடலூரில் ரூ. 100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் இம்மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இப்பெருவழியில் சிவபெருமான் நடனமாடுவதாகவும், விளையாடுவதாகவும் வள்ளலார் கூறியிருக்கிறார். மிகப் புனிதமாகப் போற்றப்படும் இப்பெருவழியில் தைப்பூச நாளில் ஏறக்குறைய 15 லட்சம் பேர் திரள்வது வழக்கம். ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவுடைய இத்திடல் தேவைப்படுகிறது. இந்நிலையில், இத்திடலில் சர்வதேச மையத்தை அமைத்தால் இடநெருக்கடி ஏற்படும். எனவே, வள்ளலாரின் மரபுக்கும், ஆய்வுக்கும் இடையூறு இல்லாமல், பண்ருட்டி சாலை, சேத்தியாதோப்பு சாலை என வேறொரு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும் என கோருகிறோம்.
இதை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பத்தில் வள்ளலார் தொண்டர்கள் இணைந்து புதன்கிழமை கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துகின்றனர். இதில், தெய்வத் தமிழ்ப் பேரவை, வள்ளலார் பணியகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கிறோம்" என்றார் பெ.மணியரசன். அப்போது, வள்ளலார் பணியக மாவட்டப் பொறுப்பாளர் ராஜமாணிக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைக் குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், மாவட்டச் செயலர் நா.வைகறை, மாநகரச் செயலர் இலெ. ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
