சிவகங்கையில் பிஎட் கல்லூரி துவங்க கோரிக்கை !!
சிவகங்கை
சிவகங்கையில் அரசு கல்வியியல் (பி.எட்.,) கல்லுாரி துவக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்ட தலைநகரான சிவகங்கையில் அரசு மன்னர் துரைசிங்கம், அரசு மகளிர் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இது தவிர மாவட்ட அளவில் ஏராளமான தனியார் கல்லுாரிகள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் இளங்கலை பட்டம் முடித்து மாணவர்கள் கல்லுாரியை விட்டு வெளியேறுகின்றனர்.
இவர்கள், ஆசிரியர் பணியை தேர்வு செய்து, பி.எட்., கல்லுாரியில் சேர அதிகளவில் விரும்புகின்றனர். ஆனால், அரசு சார்பில் சிவகங்கையில் ஒரு இடத்தில் கூட அரசு கல்வியியல் கல்லுாரி (பி.எட்.,) துவக்கப்படவே இல்லை.ஆண்டுதோறும் இளங்கலை பட்டம் பெறும், மாணவ, மாணவிகள் பி.எட்., கல்லுாரியில் சேர்வதற்கான ஆசை கனவாகவே போய்விடுகின்றன.
இதனால், உயர்கல்விக்காக பிற பட்டப்படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். தமிழக அரசு காரைக்குடிக்கு சட்டம், வேளாண் கல்லுாரி வழங்கியது போன்று, சிவகங்கையில் அரசு சார்பில் கல்வியியல் கல்லுாரி (பி.எட்.,) துவக்கி, பட்டதாரிகளின் ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்