விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை குழித்துறையில் நிறுத்த கோரிக்கை
தென்னக ரயில்வேயின் சென்னை முதன்மை இயக்க மேலாளர் மற்றும் தலைமை வணிக மேலாளரை கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் சந்தித்து ரயில்கள் இயக்கம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ரயில் எண் 16729 /16730 மதுரை - புனலூர் ரயிலுக்கு கொரோனாவுக்கு முன்பு இந்த ரயில் நிறுத்தங்களான குழித்துறை மேற்கு மற்றும் பள்ளியாடியில் நிறுத்தம் வேண்டும். ரயில் எண் 22503/22504 விவேக் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நிறுத்தம் திருவனந்தபுரம் சென்ட்ரலில் தான் உள்ளது. இடையில் நிறுத்தம் இல்லாததால் பள்ளியாடி, குழித்துறை, மார்த்தாண்டம் பகுதிகளில் வசித்து வரும் சாதாரண மக்கள் மற்றும் ஆயுதப்படை பணியாளர்கள், ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள், வயதான பெற்றோருடன் பயணம் செய்ய நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் சென்று தான் பயணிக்க வேண்டி உள்ளதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே இராணுவ வீரர்களுக்கு வசதியாக குழித்துறை ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் நாகர்கோவில் - கோட்டயம் ரயிலுக்கு நாகர்கோவில் நகரம், பள்ளியாடி மற்றும் குழித்துறையில் நிறுத்த வேண்டும், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரயில்கள் வருகை குறித்த ரயில்வே விசாரணை கவுண்டர் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது