சேர்வைக்காரன்மடம் ஊராட்சி துணைத்தலைவி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மனு அளிக்க வந்தவர்கள்
சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி மில்லை தேவராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான இடத்தில் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கடை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இயங்கி வருகிறது. ஆனால், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி ஏஞ்சல்ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் ஜெபஸ்டின் ஆகியோர் எங்களது கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பனிடம் அரசு மதுபான கடை வைக்கப்பட்ட இடம் உங்கள் சொந்த இடமாக இருக்கலாம்.
ஆனால் அது எங்கள் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளதால், நீ எங்களுக்கு மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். பின்னர் இப்போது ரூ.2 லட்சம் தராவிட்டால் பொய்யான தகவலை ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்து, விதிமுறைகளை மீறி இந்த கடை செயல்படுகிறது என புகார் கொடுத்து இந்த கடையை அகற்றுவேன் என மிரட்டியுள்ளார்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் துணை தலைவர் ஏஞ்சல்ஜெனிட்டா புகாரும் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து உயரதிகாரிகள் கொண்ட குழு விசாரித்த போது, மேற்படி டாஸ்மாக் கடை எண் 10144 அமைந்துள்ள பகுதியில் ஆலயங்களோ, பள்ளிகூடமோ, விளையாட்டு மைதானமோ, அரசு தெரிவித்துள்ள நிபந்தனை விதிமீறல்கள் ஏதும் இல்லையென அதிகாரிகள் இந்;த பகுதிகள் கடை இயங்குவதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் பல்வேறு இடையூறுகளை செய்து வரும் துணை தலைவி ஏஞ்சல்ஜெனிட்டா கடந்த 17,18 டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக சேர்வைக்காரன் மடம், காமராஜர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனை பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் பலரும் இணைந்து எங்களது சொந்த செலவில் மின்மோட்டார்கள் அமைத்து மழைநீரை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தி வந்தோம்.
அதுபோல் மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்து வந்தோம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்புணர்சியோடு செயல்பட்டு வரும் துணைத் தலைவி ஏஞ்சல்ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நாங்கள் மட்டுமே இந்த பகுதியில் மக்கள் சேவையாற்ற வேண்டும் நீங்கள் தேவையில்லாமல் இந்த பணிகள் எல்லாம் செய்ய கூடாது, என மிரட்டியதோடு, எங்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வரும் ரஞ்சித் என்ற பொன்மாடசாமி அவர்களை ஜாதி பெயரைச் சொல்லி அவதூறாக பேசியும்,
இழிவுபடுத்தியும் நீயெல்லாம் இந்த பணிகளில் ஈடுபடுகிறாயா? என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து எங்களது கட்சியைச் சார்ந்த ரஞ்சித் என்ற பொன்மாடசாமி 24.12.2023ல் சாயர்புரம் காவல்நிலையத்தில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ஏஞ்சல்ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் மீது புகார் மனு அளித்துள்ளார்.
இந்தநிலையில், துணைத்தலைவர் ஏஞ்சல்ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் ஆகியோர் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் அதிகார துஷ்பிரயோகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல், அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், எங்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் விசாரணைக்கு அழைத்து தாங்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடாமல் சுமூகமாக செல்லுங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
இதனை தனது கணவர் மூலம் செல்போனில் மறைமுகமாக காவல் நிலையத்திற்குள் வைத்து உதவி ஆய்வாளர் பேசியதை வீடியோ எடுத்து அந்த காட்சியை திரித்து, தங்கள் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்காக காவல்துறை மீதும் குற்றம் சுமத்தி, புகார் மனு அனுப்பி வருகிறார்கள். மேலும் எங்களது மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எங்களது கட்சிக்கு அவபெயரை ஏற்படுத்தும் வகையில் எங்களது மாவட்ட செயலாளர் ரவுடி பட்டியலில் உள்ளார் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர்.
இதனால் எங்களது கட்சிக்கும், மாவட்ட செயலாளருக்கும் பெரும் அவமானமும், நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டு வருகிறது. சமத்துவ மக்கள் கழகத்தைச் சார்ந்த மாவட்டசெயலாளர் அற்புதராஜ், சகாயராஜ் ஆகியோர் எங்கள் கட்சி மீது கொண்டு தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியை செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரின் துணையுடன் துணைத்தலைவர் ஏஞ்சல்ஜெனிட்டா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எங்களது கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் மீது அவதூறு பரப்பியும் மிரட்டியும் வருகின்றனர்.
சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி என்ற போர்வையில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு யாரும் அந்த பகுதியில் அரசியல் செய்யக்கூடாது, தொழில் நிறுவனம் நடத்தக் கூடாது என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார். காவல்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என ஏஞ்சல் ஜெனிட்டாவிற்கு அறிவுரை கூறினாலும், காவல்துறையினர் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார்.
எனவே, ஆட்சியர் அவர்கள் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவி ஏஞ்சல்ஜெனிட்டா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்து, அவரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பாகவும், எனது சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.