மரத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புகார் மனு
காங்கேயம் பகுதியில் திருப்பூர் சாலையில் சென்னியப்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் சுமார் 20 ஆண்டுகாலமாக சாலையோரம் இருந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான வேப்ப மரத்தை ஒரு சிலர் அனுமதி இன்றி நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரத்தை வைத்து வெட்டி அகற்றியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது நிழல் இன்றி தவிக்கின்றனர். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பலர் பதிவிட்டு வந்த நிலையில் நேற்று காங்கேயம் வேர்கள் அமைப்பின் தலைவர் சங்கரகோபால் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி இடமும், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தனிடமும் புகார் மனு அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நடவடிக்கை எடுக்காமல் தவறும் பட்சத்தில் மரம் வெட்டப்பட்ட இடத்தில் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். மேலும் இதே வேப்பமரம் வெட்டப்பட்ட விவகாரத்தில் திமுக கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜவஹர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையில் நேற்று மாலை காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தனிடம் புகார் அளித்துள்ளனர்.