குடிநீர் தொட்டி மாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடிநீர் தொட்டி
மினிடேங்க்குகளை சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் காலனியில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன், மூன்று இடங்களில் சிறு மின்விசைக் குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், மூன்றில் ஒரு சிறு மின்விசைக் குழாயில் மின்மோட்டார் பழுதடைந்தது. அதைத் தொடர்ந்து ஒரிரு மாதங்களில் ஒருநாள் இரவில், குடிநீர் தொட்டியும் மாயமானது. இதனால், மற்ற இரு இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிநீரை இப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் வீட்டு குழாய் இணைப்பு குழாயில், இரு மாதத்திற்கு மேலாக சரியாக குடிநீர் வருவதில்லை. இதனால், இரு குடிநீர் தொட்டியில் மட்டும் வீட்டிற்கு தேவையான தண்ணீரை பிடித்து வந்தனர். இந்நிலையில் இரு குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரும் பழுதடைந்துவிட்டது. ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீருக்காக திண்டாடி வருகிறோம். காலிக் குடங்களுடன் பிற பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது என, கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள மூன்று 'மினிடேங்க்கு'களையும் சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல்ஒட்டிவாக்கம் காலனியினர் வலியுறுத்தி உள்ளனர்."
Next Story