ஹெலிகாப்டர் மூலம் மீட்பு : கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு : கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை

ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்து ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் சிக்கியவர்களை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் குடியிருப்பில் வசித்துவரும் ஆயுதப்படை போலீஸ்காரர் பெருமாள், அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவி அனுசுயா மயில் (வயது 27), இவர்களின் 1½ வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர், வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். அந்த சமயத்தில் அங்கு ஹெலிகாப்டர் வந்தபோது, உதவி என அட்டையில் எழுதி காண்பித்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்த மீட்புப்படையினர் இதை கவனித்து, பெருமாள் குடும்பத்தினர் 4 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டு, மதுரை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அனுசுயாவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் அவர் இருந்தார். இந்தநிலையில் அவருக்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்-சேய்க்கு தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், அனுசுயாவுக்கு சுகப்பிரசவம் மூலம் ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். 2 நாட்கள் டாக்டர்கள் கண்காணிப்பார்கள். அதன்பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்றனர். இதற்கிடையே, அனுசுயா, மீட்பு படையில் ஈடுபட்ட விமானப்படையினருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசி இருப்பதாவது: வெள்ளத்தால் கடந்த சில நாட்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்தோம். ஹெலிகாப்டரில் வந்த விமானப்படையினர் எங்களை மீட்டு பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வந்தனர். அங்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் எனக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தேன். குறிப்பாக இங்குள்ள டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் பாசத்துடன் கவனித்து கொண்டனர். அதிகாலை 2.05 மணி அளவில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு எங்களை மீட்டதால் தற்போது உயிருடன் இருக்கிறோம். எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags

Next Story