அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் அம்மன் சிலை மீட்பு
கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த ஆமணக்கன் விளை கடற்கரையில் சுமார் 2.5 அடி உயரம் உள்ள அம்மன் சிலை ஒன்று கிடந்தது. அந்த சிலையின் நெற்றியின் மேல் பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டது. இதை பார்த்ததும் அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அஞ்சு கிராமம் போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து போலீசார், லீ புரம் கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா அம்மன் சிலையை கைப்பற்றி கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். ஏதாவது கோவில்களில் பழைய சிலைகளை மாற்றி விட்டு புதிய சிலைகள் வைக்கும் போது, பழைய சிலையை கடற்கரையில் கொண்டு போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.