இளம்பெண் சடலமாக மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்

இளம்பெண் சடலமாக மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்
மணப்பாறை அருகே இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்; அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியை சோ்ந்தவா் ஹரிஷாலினி(23). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறைப்பட்டியில் உள்ள திரையரங்கில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய ஜெபஸ்தியாா்பட்டி நவீன்குமாா் (22) என்பரை காதலித்து திருமணம் செய்தாா். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் நவீன்குமாா் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த ஹரிஷாலினி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ஹரிஷாலினி உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், சம்பவம் தொடா்பாக மாலை வரை போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ஹரிஷாலினியின் உறவினா்கள் மற்றும் ஊா் மக்கள், விசிக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் சக்தி (எ) ஆற்றலரசு, நகரச் செயலாளா் வடிவேல் ஆகியோா் தலைமையில் மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு மணப்பாறை - விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளா்கள் ஜெ.கே.கோபி, பிரபு ஆகியோா் உறவினா்களிடம் சமரசம் பேசி, கணவா் வீட்டினரிடமிருந்து குழந்தையை பெற்று பெண் வீட்டாரிடம் ஒப்படைத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹரிஷாலினி உயிரிழப்பு குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். இச்சம்பவத்தில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் விசாரணையும் இருப்பதால், இன்று உடற்கூறாய்வு நடைபெறுகிறது.

Tags

Next Story