தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
தற்கொலை
புளியங்குறிச்சி கிராமம் பெரியாயி கோயில் அருகே உள்ள பாலமரத்தில் துணியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் ஆண் சடலம் இருந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இன்று காலை வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் புளியங்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுசாமி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி சங்கீதா சம்பவ இடத்திற்கு போலீசாரிடம் வந்து தங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குடும்பத்துடன் புளியங்குறிச்சி கிழக்கு தெருவில் வசித்து வருவதாகவும் தனது கணவர் பெங்களூரில் தற்காலிக கூலி வேலை செய்து வருவதாகவும் தீபாவளி விடுமுறைக்கு வந்திருந்தவரை ஒரு வாரம் இருக்க சொன்னதற்கு நான் செல்கிறேன் என்று கோபித்துக் கொண்டு நேற்று இரவு 8 மணிக்கு சென்றுவிட்டார் என கூறினார். சடலத்தை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவரின் மனைவி சங்கீதாவிடம் புகாரை பெற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.