பாத்திரத்தில் சாப்பாடு தர மறுத்த உணவகம்

பட்டுக்கோட்டையில் பார்சல் உணவை பாத்திரத்தில் தர உணவகம் மறுத்தததால் மாணவர் ஒருவர் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு உண்டானது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர கடை வீதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இங்குள்ள உணவகங்கள், தேநீர்க்கடைகள், பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது. பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சக்திகாந்த். சமூக ஆர்வலர். இவரது மகன் ஜெய்குரு (வயது 14). அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெய்குரு மதியம் சாப்பாடு வாங்குவதற்காக பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றார். கடைக்கு போகும்போது சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்களும் எடுத்துச் சென்று 110 ரூபாய் கொடுத்து ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிக் கொண்டு, பார்சல் கட்டுமிடத்திற்கு சென்று சாப்பாடு கேட்டார். அப்போது அங்குள்ள உணவக ஊழியர் பாத்திரத்தில் சாப்பாடு தரமாட்டோம். பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என்று கூறினார்.

அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியுள்ளார். உடனே ஹோட்டல் கேஷியர் சிறுவனிடமிருந்து டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்து சிறுவனை திருப்பி அனுப்பிவிட்டார். உடனே ஜெய்குரு உணவக வாசலிலேயே நின்று கொண்டு தனது தந்தையிடம் செல்போனில் இந்த தகவலை கூறினார். உடனே அங்கு வந்த ஜெய்குருவின் தந்தை சக்திகாந்த், உணவக ஊழியர் மற்றும் காசாளரிடம் வந்து கேட்டதற்கு அவர்கள் சாப்பாடு பாத்திரத்தில் கொடுக்க மாட்டோம். பிளாஸ்டிக் பைகளில் தான் கொடுப்போம் என்றனர். அதற்கு சக்திகாந்த், நாங்கள் பிளாஸ்டிக் பைகளில் வாங்கி சாப்பிட்டு கேன்சர் வந்து சாக வேண்டுமா? என்று கேட்க, உடனே உணவக காசாளர் பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம். விருப்பமிருந்தால் வாங்குங்க இல்லையேல் வேறு கடைக்கு போங்க என்று சொல்லி விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறுவன் ஜெய்குரு தனது 4 வயது தம்பி ஹேமந்த்தை அழைத்துக் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்றார். அப்போது சிறுவன் ஜெய்குரு ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற அமைப்பை முதுகில் கட்டிக்கொண்டும், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து கொண்டும் தனது தம்பியை அழைத்துக் கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து இருவருமே வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகா, வட்டாட்சியர் சுகுமார் ஆகியோரிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட உணவக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நூதன தர்ணா போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மற்றும் பேக்கரி, டீக்கடை, பழக்கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன் அதிரடி ஆய்வு நடத்தினர். 4 கடைகளுக்கு 6,000 ரூபாய் அபராதம் விதித்தும், பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் நடவடிக்கை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story