ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு: 2 பேர் கைது

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு:  2 பேர் கைது

கோப்பு படம் 

தஞ்சையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கொலை செய்யப்பட்ட வழக்கில் மருமகன் உள்பட 2 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ. மனோகரன் (71).

இவர் திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டிலுள்ள குளியலறையில் வாயில் துணி அடைக்கப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் வியாழக்கிழமை காலை உயிரிழந்து கிடந்தார். இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மனோகரனின் மூத்த மகள் மனோ ரம்யா திருமண தகவல் மைய செயலி மூலம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பூமாலூரைச் சேர்ந்த ஜி. ராஜ்குமாரை (43) காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு மனோ ரம்யா விவாகரத்து பெற்றார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் வீட்டில் இருந்த மனோகரனை ராஜ்குமார் தனது உறவினரான திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள, காரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த எம். சரவணகுமாருடன் (25) இணைந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, ராஜ்குமாரையும், சரவணகுமாரையும் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Tags

Next Story