வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

வருவாய்த்துறை அலுவலர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அனைத்து தாலுகாக்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்காக புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்ய முழுமையான நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 3 கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி முதல் கட்டமாக கடந்த 13- ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக பணிகளைப் புறக்கணித்து நேற்று முன்தினம் முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று 2-து நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிமுள் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனஞ்ஜெயன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பூபதி வரவேற்றார். வட்டத் தலைவர் குமரன் நன்றி கூறினார்.

வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாகை தாலுகா அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பல்வேறு பணிகளுக்காக தாலுகா அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story