வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
வருவாய் அலுவலர்கள் போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சான்றிதழ் வழங்குவதற்காக புதிதாக துணை தாசில்தார் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறும் போது, வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே முதல் கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம்.
ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து இன்று (நேற்று) பணிகளை புறக்கணித்து 2-ம் கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். இதனால் மாவட்டத்தில் வருவாய்த்துறை பணிகள் பாதித்து உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்த போராட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர்களின் காத்திருப்பு போராட்டத்தால் வருவாய்த்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன.