ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலி சம்பவத்தையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா பொருட்கள் நடமாட்டத்தை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தல் கலெக்டர் பேசியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து, திடீர் சோதனை மேற்கொண்டு, போலீசார் வழக்குகள் பதிந்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை கண்டறிந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
5 வழக்குகள் முதல் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளவர்கள் விபரத்தினை தயார் செய்ய வேண்டும்.ரகசிய தகவல்களின் அடிப்படையில் உடனுக்குடன் தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராம, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து, ஊராட்சி செயலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தகவல் சேகரித்து, போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல்கள் தெரிந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், காவல் துறை, சுகாதாரத் துறையினருடன் சேர்ந்து கூட்டுத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மருந்தகங்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மருந்து ஆய்வாளர், மருந்தகங்கள் மற்றும் மருந்து ஏஜன்சீஸ் ஆகியவற்றில் விற்பனையில் விதிமீறல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.சட்ட விரோத கள்ளச்சாராய விற்பனைக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார்தான் முழு பொறுப்பு.
கிராம உதவியாளர்கள் மூலம் ரகசிய தகவல்களை பெற்று, தாசில்தார் மூலம் காவல்துறையினருக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.மருத்துவமனையில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் குறித்த விபரத்தினை காவல் துறையினருக்கு டாக்டர்கள் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். டாஸ்மாக் விற்பனை குறைவு உள்ள மதுபானக்கடை அருகே உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் அல்லது வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து தகவல் அளிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் ரெக்டிபைடு ஸ்பிரிட் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் மூலம் வழங்கப்படும் ஸ்பிரிட் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும். மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.எஸ்.பி., தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், கலால் உதவி ஆணையர் முருகேசன், ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.