திருத்தணி அருகே புரட்சி பாரத கட்சி ஒன்றிய செயலர் வெட்டிக் கொலை
கொலை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தாழவேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அசோக்,37. இவர், புரட்சி பாரதம் கட்சியின் திருவாலங்காடு வடக்கு ஒன்றிய செயலர். இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு தாழவேடு சமத்துவபுரம் செல்லும் நுழைவு வாயிலில் அசோக் உட்கார்ந்து மொபைலில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மூன்று இளைஞர்கள் திடீரென அங்கு வந்து கண்இமைக்கும் நேரத்தில் மறைந்து வைத்திருந்து அரிவாள்களால் சராமரியாக அசோக்கை கழுத்து மற்றும் முகம் பகுதியில் வெட்டி தலையை சிதைத்தனர். அப்போது சமத்துவபுரம் எதிரே பெட்டிக்கடை வைத்திருந்த கலையரசன்,30 என்பவர் இச்சம்பவத்தை பார்த்ததும் விரைந்து சென்று இளைஞர்களை தடுக்க சென்றார். கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், கலையரசனின் வலது கையில் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில், அசோக் சம்பவ இடத்திலேயே இறந்தார். தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் கலையரசனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ், எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அசோக் உடலை மீட்க முயன்றனர். அப்போது தாழவேடு காலனி பகுதி மக்கள், தப்பியோடிய இளைஞர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலை செய்த இளைஞர்கள் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கஞ்சா விற்பனை மற்றும் போதையில் அடிக்கடி பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். அவர்களை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் உறுதி கொடுத்ததும் போலீசார் உடலை மீட்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதி வழங்கினர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.