காணாமல் போன நாயைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு
தஞ்சையில் காணாமல் போன வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி, தனது வளர்ப்பு பிராணி மீதான பாசத்தை எஜமானர் வெளிப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் நகரில் கடந்த இரு தினங்களாக நகரின் பல்வேறு இடங்களில் நாய் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், "படத்தில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த 23.05.2024 முதல் காணவில்லை. நாயின் பெயர் சிம்பா, கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சார்ந்த, வெள்ளை நிறத்திலான இரண்டு வயதுடைய நாய். இதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்" என தமிழிலும், ஆங்கிலத்திலும் சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், கடந்த 23ஆம் தேதி தஞ்சாவூர் அசோக் நகர் பகுதியில் வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது. அதனைக் குட்டியாக இருந்தபோது வாங்கி கடந்த இரண்டு வருடங்களாக வளர்த்து வருகிறோம். அது எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தது. அது நாய் என்பதை விட எங்களுடைய சகோதரன் போலவே மிகவும் பாசமானது. அது காணாமல் போனது முதல் பல இடங்களிலும் தேடி வருகிறோம். ஆனால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் தற்போது எங்கள் சிம்பாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கம் பரிசாக ரூ.20,000 வழங்கப்படும் என அறிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளோம். தகவல் தெரிந்தவர்கள் எங்களுக்கு உதவலாம். நாய் காணாமல் போனது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாய் கிடைக்காததால் கவலையுடன் உள்ளோம்" என வேதனையுடன் தெரிவித்தார். சொத்து இல்லாவிட்டால் பெற்ற தாயோ, தந்தையோ காணாமல் போனால் கூட தேடாமல் கடந்து செல்லும், இந்த அவசர உலகத்தில் தாங்கள் வளர்த்து வந்த நிலையில் காணாமல் போன நாய்க்காக சுவரொட்டி ஒட்டியுள்ள செயல், உரிமையாளரின் நாய் மீதான பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றே கூறலாம்.