நிலா பிள்ளையாருக்கு சோறு எடுக்கும் விழா
கொங்கு பகுதிகளில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது நிலா பிள்ளையாருக்கு சோறு எடுக்கும் விழா. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல நிலாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. தைமாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று நிலா பிள்ளையார் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பௌர்ணமி தினத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு முளைப்பாரி வைத்து பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கைகாட்டிவலசு திருவள்ளுவர் நகரின் மையத்தில் பிள்ளையாரை வைத்து சிறுமி ஒருவரை பிள்ளையாரின் மனைவியாக அலங்கரித்து வழிபட்டனர்.அப்போது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கும்மியடித்து கோலாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர். நிலா பிள்ளையார் வழிபாடு என்பது பாரம்பரியமான ஒன்று.5 நாட்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலவிதமான உணவு சமைத்து அதனை அனைவரும் பகிர்ந்து உண்போம்.6 வது நாளில் ரசம் சாப்பாட்டுடன் விழா நிறைவு பெறும். இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய விழாக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.