கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 2,984 இடங்கள் ஒதுக்கீடு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி, முதல் வகுப்பு) 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) குறைவாக வருவாய் ஈட்டும் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை ஆகிய சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள்,
உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்தல் வேண்டும். மேலும், பள்ளியிலிருந்து 1 கி.மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் அதிகபட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களில் பெற்றோர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம். இந்த இடஒதுக்கீட்டின்படி நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் சேருவதற்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, 254 மெட்ரிக்குலேசன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 2,984 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே, பெற்றோர்கள் ஏப்ரல் 22 தொடங்கியது முதல், வரும் மே 20 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய மற்றும் தகுதியற்ற மாணவர்களின் விவரங்கள் மே 27ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்கு அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு கூடுதலாக விண்ணப்பம் பெறப்பட்டிருந்தால், குலுக்கல் முறையில் மே 28ஆம் தேதி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எனவே, இந்த வாய்ப்பினை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.