திருச்சிற்றம்பலத்தில் சாலையில் குவிந்து கிடக்கும் மணலால் விபத்து அபாயம்
திருச்சிற்றம்பலம் பகுதியில் சாலையில் குவிந்து கிடக்கும் மணலால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதி முக்கியமான போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை - அறந்தாங்கி வழித்தடத்தில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க, மருத்துவமனை, வெளியூர் செல்ல, பள்ளி, கல்லூரி செல்ல என பல்வேறு காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர்.
இந்த வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தினசரி வந்து செல்கின்றன. இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலையையொட்டி மணல் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக துறவிக்காடு சாலை, ஆவணம் சாலை, நாடங்காடு சாலை என அனைத்து சாலைகளிலும் இவ்வாறு மணல் சேர்ந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கனரக வாகனங்கள் வரும்போது, ஒதுங்குவதற்காகவும்,
தாங்கள் செல்லும் பகுதிக்கு திரும்பும்போதும் மணல் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பெண்கள், பள்ளிக் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக சாலையில் குவிந்து, பொதுமக்கள்,
வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள மணலை அகற்ற சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.