"சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அபாயம்"

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அபாயம்
சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள லாரிகள் 
வையாவூர் சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சரக்கு லாரிகளை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில், சரக்கு முனையம் இயங்கி வருகிறது. இந்த முனையத்தில் சரக்கு ரயில் வாயிலாக வெளிமாநிலங்களில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு கோதுமை மற்றும் இரும்பு பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் இங்கிருந்து வெளிமாவட்டத்திற்கும் அனுப்பப்படுகின்றன. அவ்வாறு சரக்கு ரயிலில் அனுப்புவதற்காக நெல் மூட்டைகளை ஏற்றி வரும் சரக்கு லாரிகள், காஞ்சிபுரம் -- வையாவூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன.

வையாவூர் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்டோரும், கோனேரிகுப்பம், ஏனாத்துார் வழியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையோரம், சரக்கு லாரிகள் நிறுத்தப்படுவதால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பிரதான சாலையை ஒட்டியுள்ள குறுக்கு தெருக்களை மறித்து நிற்கும் சரக்கு லாரிகளால், இப்பகுதிவாசிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர்

. இந்த சாலையில் இரு இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளதால், குடித்துவிட்டு வரும் 'குடி'மகன்கள் குடிபோதையில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வையாவூர் சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சரக்கு லாரிகளை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, இப்பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்."

Tags

Next Story