தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் !
கழிவுநீர்
சேலத்தில் மாநகராட்சிக்கு பின்புறம் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி 31-வது வார்டு, அதாவது மாநகராட்சிக்கு பின்புறம் கோட்டை மேல்தெரு உள்ளது. இந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ளது. பள்ளிவாசலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகைக்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள வாறுகால் தூர்வாரப்படாமல் குப்பைகள், மர இலைகள் சேர்ந்து தண்ணீர் செல்ல வழி இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்கின்றனர். இதனை சரிசெய்ய கூறினால் தற்காலிகமாக வாறுகாலை சுத்தப்படுத்துகின்றனர். அதன்பிறகு மீண்டும் பழைய நிலைதான் தொடர்கிறது. இன்னும் சில நாட்களில் ரம்ஜான் நோன்பு தொடங்க இருக்கிறது. அப்போது அந்த பகுதியில்தான் நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்படும். எனவே இங்கு சாக்கடை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, வாறுகாலை உயர்த்தி கட்டினால்தான் அந்த பகுதியில் கழிவுநீர், மழைநீர் தேங்காமல் இருக்கும். எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story