ராமநாதபுரம் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம்
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட 6}வது வார்டு முத்துமாரி நகரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 90 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
முறையான திட்டமிடல் இன்றி முத்துமாரி நகர் பகுதியில் பள்ளமாகவும், கழிவுநீர் வெளியேறும் பகுதி மேடாகவும் அமைக்கப்பட்டதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனைக்கும் தீர்வு இதுவரை எட்டப்படாததால் அவ்வழியாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் உயர்நிலைப் பள்ளி, இஸ்லாமியர்களின் பள்ளிவாசல், பல் மருத்துவமனை என பொதுக்கள் அதிகம் சென்று வரக்கூடிய சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கமுதி பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு முத்துமாரி நகர் பொதுமக்களின் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.