பாதை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்முட்டுக்கூர் ஊராட்சி, வில்வமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த பல ஆண்டுகளாக ஜங்காளபள்ளி செல்வதற்கான பாதை வசதி கேட்டு,அதிகாரிகளிடமும் அவ்வப்போது நடைபெறும் அரசு முகாம்களிலும், மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இதுவரை இந்த கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள்,விளைபொருட்கள் கொண்டு செல்லும் விவசாயிகள், ரேஷன் கடைக்கு செல்லும் மக்கள், கூலிவேலைக்கு செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். வில்வமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 5 அடி நிலத்தை பொதுவழியாக இதுவரை பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் தனியாருக்கு சொந்தமான பாதையை அதன் உரிமையாளர்கள் கம்பி வேலி அமைத்து மூடிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கெங்கசாணிக்குப்பம் கீழ்முட்டுகூர் இடையே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கீழ் முட்டுக்கூர் வழியாக வேலூர் செல்லும் அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் நிரந்தர சாலை வசதி செய்து தருவதாகக் கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணிநேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.