சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை மறியல் - கிராம மக்கள் அறிவிப்பு

சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை மறியல் - கிராம மக்கள் அறிவிப்பு
சாலை மறியல் - கிராம மக்கள் அறிவிப்பு 
தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து, நவம்பர் 30 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பட்டத்தூரணி தெற்கு பகுதி கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், சொர்ணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பட்டத்தூரணி தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாலையை, தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வசித்து வரும் 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், பேராவூரணி வட்டாட்சியர் என அனைத்து நிலை அலுவலர்களிடமும் நேரிலும், பதிவு தபாலிலும் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, நவம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பட்டத்துரணி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், பேராவூரணி வட்டாரம், சொர்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி கிராமத்தில் பள்ளிக்கூட சாலையை சிமெண்ட் சாலையாக்கும் பணிக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரால் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் பணிகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை அளவீடு செய்து தனி நபர்கள் ஆக்கிரமிப்பு அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரால், பேராவூரணி வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு உள்ளது உறுதியாகிறது. அரசு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, காலதாமதமின்றி ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

Tags

Next Story