இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திமுக மாவட்ட அலுவலகம், இந்த அலுவலகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் கார் ஓட்டுநராக பணியாற்றும் ஜெயகிருஷ்ணன் என்பவர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ஜெயகிருஷ்ணன் மீது மோதியுள்ளனர், இதில் ஜெயகிருஷ்ணன் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்ரபிக் என்ற இளைஞர் காயமடைந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறி ஜெயகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அப்துல் ரபிக் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மேலும் இரண்டு இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெயகிருஷ்ணன் மற்றும் அப்துல் ரபிக் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்துல் ரபிக் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களின் உறவினர்கள், அப்துல் ரபிக் மற்றும் அவருடன் வந்த இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு இளைஞர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.