பேராவூரணி அருகே கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்

பேராவூரணி அருகே கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல்
சாலை மறியல் ஈடுபட்ட மாணவிகள்
பேராவூரணி அருகே கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேராவூரணி அருகே கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி, அரசு நகரப் பேருந்து முன்பு அமர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வெள்ளியன்று காலை, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பாலத்தளி வழியாக இரண்டு அரசு நகரப் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. பேராவூரணியில் காலை 7.30 மணிக்கு புறப்படும் அரசு பேருந்து, பாலத்தளி கிராமத்திற்கு சுமார் எட்டு மணிக்கு வருகிறது.

இந்நிலையில், பேராவூரணி பகுதிகளில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பயணிகளும், பள்ளி மாணவ- மாணவிகள் பேருந்தில் அதிக அளவில் ஏறி விடுவதால், பாலத்தளி, பல்லாங்குழி, துர்காநகர், துவரமடை ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பேருந்தில் போதிய இடம் இல்லாமலும், ஏற முடியாமல் படிகளில் தொங்கியவாறு பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், இப்பகுதியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் விழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்தில் ஏற முடியாத அளவிற்கு தவிர்த்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பலமுறை போக்குவரத்து அலுவலர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், வெள்ளிக்கிழமை காலை பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற நகரப் பேருந்து முன்பு பாலத்தளி கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போக்குவரத்து உயர் அலுவலர்கள் கிராம மக்களிடம் செல்போனில் பேசி, ஒரு வார காலத்திற்குள் தினமும் காலை 8 மணிக்கு ஒட்டங்காட்டில் இருந்து பாலத்தளி வழியாக பட்டுக்கோட்டைக்கு கூடுதலாக ஒரு நகரப்பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story