மலை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் !

மலை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் !

சாலை மறியல் போராட்டம்

தேன்கனிக்கோட்டையில் மலை கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வனத்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலை கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வனத்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்கள் கிணறுகளை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வனத்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சியில் 40க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ராகி, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் செண்டுமல்லி ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த கிராமங்களில் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக கூறப்படுகிறது பயிர்கள் காய்ந்து போனால் சுமார் 25 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது. பெட்டமுகிலாளம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை சமாளிக்க கிராமத்தில் உள்ள கிணறுகளை தூர்வார வேண்டும், புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும், ஹிட்டாச்சி இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என வனத்துறையினருக்கு அந்த கிராம மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் காரணங்களை கூறி அதனை வனத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் செய்ய மறுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக துண்டு பிரசுரங்களை கிராமம் முழுவதும் விநியோகித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கிராம மக்களை நேரில் அழைத்து தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் பரிமேலழகர் தலைமையில் வனத்துறை காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பை கைவிட வேண்டும் எனவும் கிராம மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் கிராம மக்கள் அப்போது சமாதானத்துடன் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பங்களா முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை மறித்து தங்களது கிராமத்தில் நிலவும் வறட்சியை போக்க கிணறுகளை தூர்வார வேண்டும் புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் ஹிட்டாச்சி வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story