நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அந்த வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல்லில் தொ.மு.ச, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலை ஆர்ச் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நாமக்கல் பஸ்நிலையம் முன்பு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றன.

Tags

Next Story