குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
சாலை மறியல்
சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துார் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில், வடக்கு தெரு உட்பட 2 பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளாமல் சிரமமடைந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், நேற்று காலை 7.30 மணியளவில் அவ்வழியாக சென்ற அரசு பஸ்சினை மறித்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊராட்சி தலைவர் மாயாண்டி, வரஞ்சரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் விநியோகிக்க முடியவில்லை, தண்ணீர் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்வதாகவும், தற்காலிகமாக டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிப்பதாகவும் ஊராட்சி தலைவர் மாயாண்டி தெரிவித்தார். இதனையடுத்து காலை 8.30 மணியளவில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.