குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து சாலை மறியல்!

விராலிமலை அருகே உள்ள மாதுராபட்டியில் சீரற்ற குடிநீர் விநியோகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விராலிமலை அருகே உள்ள மாதுராபட்டியில் முறையாக குடிநீர் வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதுரா பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக நீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். சிலநேரங்களில் திறந்து விடப்படும் நீரும் குறைந்த அழுத்தத்தில் வருவதால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையாம். கோடை வெயில் வாட்டிவதைக்கும் சூழலில் குடிநீருக்காக பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர் ரூபா பிரியாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக்கூடிய எங்களது கிராமத்தில் குடிக்கத்தண்ணீர் தேவையென்றால் கூட ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை செல்லக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. வயதான காலங்களில் எங்களால் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்று குடங்களில் நீர்டுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது என்றார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஒன்று கூடி கொடும்பாளூர்- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து அவ்வழியே சென்ற பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் ரூபா பிரியா உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story