செய்யூர் அருகே சாலை அமைக்கும் பணி தீவிரம்
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, 1வது வார்டுக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காளியம்மன் கோவில் இணைப்பு சாலை, கடந்த 25 ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து இருந்ததால், அப்பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.
பேரூராட்சி வாயிலாக, சேதமடைந்த சாலையை சீரமைக்க, கடந்த ஆண்டு 16.80 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, 210 மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, டிச., மாதம் சாலை அமைக்கும் பணி நடந்தது. பின், கடந்த மூன்று மாதங்களாக, ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.. அதன் விளைவாக, நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்ட பகுதி முழுதும் தார் சாலை அமைக்கப்பட்டது.