சாலை ஆக்கிரமிப்பு: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

சாலை ஆக்கிரமிப்பு: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோப்பு படம் 

திருவேற்காடு ராஜரத்தினம் நகரில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் சாலையை மீட்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவேற்காடு நகராட்சி 10-ஆவது வார்டில் ராஜரத்தினம் நகர் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 1992- ஆம் ஆண்டு வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டன. அப்போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு, அவை அனைத்தும் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்குள்ள சாலைகளை நகராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள ராஜரத்தினம் நகரில் 6-ஆவது தெருவில் இருந்து 5-ஆவது தெருவுக்கு செல்லும் சாலையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து சாலை தனக்குச் சொந்தமானது என்று கூறிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சாலையை மீட்டு தரக் கோரி, பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ராஜரத்தினம் நகரில் 6-ஆவது தெருவில் சாலையை ஆக்கிரமித்துள்ள நபரால் போக்குவரத்து இடையூறாக உள்ளதாகவும், 5- ஆவது தெருவில் இருந்து 6-ஆவது தெருவுக்குச் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் ரூ.50 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார் எனக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மேலும், இந்த பிரச்னைகள் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story