வழித்தட பிரச்சனை-லாரியை சிறை பிடித்த விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
சூலூர் அருகே வழித்தடத்தை தடை செய்த ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு கற்களை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த விவசாய தோட்டங்களுக்கு அருகே ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.இந்த நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் வழித்தடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி ரியல் எஸ்டேட் வியாபாரிகள் திடீரென கருங்கற்களைக் கொட்டி தடை ஏற்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கருங் கற்களை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி நீதிமன்றம் மூலம் பிரச்சனையில் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இடையிலான வழித்தட பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
Next Story