கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: மதுராந்தகத்தில் அபாயம்

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி:  மதுராந்தகத்தில்  அபாயம்

புதர் மண்டியுள்ள சாலை

மதுராந்தகத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அய்யனார் கோவில் சந்திப்பு கடந்து, பெரும்பாக்கம் வழியாக உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையை, 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் எதிர்திசையில் பயணித்து, மதுராந்தகம் டவுன் பகுதி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சாலையை விரிவாக்கம் செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே சிறிய பாலம் ஒன்றும், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே பெரிய பாலம் ஒன்றும் அமைக்கும் பணி நடந்து முடிந்துஉள்ளது.

தற்போது, இரண்டு ஆண்டுகளை கடந்தும் சாலை பணி முடிவு பெறாமல், ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையிலேயே உள்ளது. ஜல்லிக்கற்கள் மீது வாகனத்தை ஓட்டிச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கீழே விழுந்து அடிபடுகின்றனர்.

இதனால், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், எதிர்திசையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, உயிர் சேதங்களை தவிர்க்கும் பொருட்டு, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story