கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்.
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பெ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் த.பழனிசாமி மாவட்ட துணைத் தலைவர் க. கருணாநிதி, மாவட்ட இணை செயலாளர் அ .ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் சி. சுப்பிரமணியன் கோரிக்கையை விளக்க உரையாற்றினார்.
இந்தப் போராட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகரனின் தொழிற்சங்க விரோத போக்கினை வன்மையாக கண்டித்தும், நிர்வாகப் பணிகளில் தொழிற்சங்க ரீதியான கோரிக்கைகள் மீது பாராமுகம் காட்டும் தலைமை பொறியாளர் மெத்தன போக்கை கண்டித்தும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் இறந்தோர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், தகுதியானவர்களுக்கு சாலைப் பணியாளராக பணி நியமனம் கோட்ட பொறியாளர் வழங்கிட அனுமதிக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் ரூபாய் 5,200 20,200 தர ஊதியம் ரூபாய் 1,900 வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தையை கூட்டி தீர்வு காண வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கை அரசுக்கு முன்வைத்து கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அலுவலக உதவியாளர் சங்கத்தின் மகாதேவன், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட பொறியாளர் சுப்பிரமணியன், உள்ளிட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.