சாலையோரம் மதுபாட்டில்கள்; நடைபயிற்சி செல்வோர் அவதி
பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை, 42 கி.மீ., உடையது. கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ் காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. மேலும், படூர் -- தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் - -ஆலத்துார் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், திருப்போரூர்- - ஆலத்துார் இடையிலான ஆறு வழிச்சாலை 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு, 90 சதவீத பணி முடிவடைந்துள்ளது.
தற்போது, ஏராளமான வாகனங்கள் இச்சாலை வழியாக செல்கின்றன. காலை, மாலை நேரங்களில் திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, தண்டலம் பகுதிகளை சேர்ந்தோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில், திருப்போரூர், கேளம்பாக்கம், தையூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி வந்து, திருப்போரூர் ஆறு வழிச்சாலையில் அமர்ந்து மதுவை குடிக்கின்றனர். அதன்பின் மதுபாட்டில்களை போதையில் சாலையோரங்களில் வீசியும், அப்படியே சாலையில் விட்டும் செல்கின்றனர். மேலும், வாங்கி வந்த உணவு பொருட்களையும் சாப்பிட்டு விட்டு அப்படியே விட்டு செல்கின்றனர்.
இதனால், சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நடைபயிற்சி செல்வோர், வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த ஆறு வழிச்சாலையில் மது அருந்தும் 'குடி'மகன்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.