சாலையோரம் வாகன நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்
மறைமலை நகர் நகராட்சி 21 வார்டுகளை உடையது. மறைமலை நகர் நகர்ப்புற பகுதிகளில் 1, 000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், நுாற்றுக்கணக்கான வணிக கடைகள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மறைமலை நகர் பஜார் வீதிகளில் நகராட்சி சார்பில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மறைமலை நகர் எம். ஜி. ஆர். , சாலை அதிகளவு வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இங்கு சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்த சாலையின் இருபுறமும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகளால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மறைமலை நகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து சாலையோரங்களில் நிறுத்தி விட்டு பேருந்து, மின்சார ரயில்கள் வாயிலாக வேலைக்கு செல்கின்றனர்.
அதன்பின், இரவு மீண்டும் வந்து வாகனங்களை எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக மற்ற வாகன ஓட்டிகள், 'பீக் ஹவர்'களில் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.